திண்டுக்கல், ஜூலை 9: அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பயணிகளை ஏற்றிச் சென்ற ஷேர் ஆட்டோவை தடுத்து நிறுத்தி, நடவடிக்கைக்காக காவல் துறை வசம் ஆட்டோவை ஒப்படைத்தார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கு.நாகராஜன்.
திண்டுக்கல் பழனி சாலையில் முருக பவனம் அருகில் ஆய்வுக்காக ஆட்சியர் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தார். அப்போது அளவுக்கு மீறி பயணிகளை ஏற்றிக் கொண்டு விரைந்து சென்ற ஷேர் ஆட்டோவை தடுத்து நிறுத்தினார். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியது, சாலை வரி செலுத்தாமல் இருந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர், ஆட்டோவின் உரிமையாளர், ஆட்டோவினை காவல்துறையிடம் ஒப்படைத்து நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். மேலும் ஆட்டோவில் பயணம் செய்த பயணிகளை இறக்கி விட்டு, அவ்வழியே சென்ற பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தார்.
போக்குவரத்து விதிகளை மீறிச் செல்லும் வாகனங்கள் மீதும், வாகன ஓட்டுநர்கள் மீதும், வாகன உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.