திண்டுக்கல், ஜூலை 9: திண்டுக்கல் நகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் ஆத்தூர் காமராஜர் சாகர் அணை பணிகளை மாவட்ட ஆட்சியர் கு. நாகராஜன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு 15 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதனை உடனடியாக 7 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கும் வகையில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டதால் தற்போது வாரம் ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது.
திண்டுக்கல் நகர மக்களுக்கு 3 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க சிறப்புத் திட்டத்தினை மேற்கொள்ளும் நோக்கில், குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி அலுவலர்கள், மின்சாரத் துறை அலுவலர்களுடன் ஆத்தூர் அணைப் பகுதியிலும், நகராட்சி நீரேற்று நிலையத்திலும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
மூன்று நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்குவதற்கு ஏதுவாக புதிய திட்டத்தினை தயாரிக்க, நகராட்சி ஆணையர் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
பின்னர் நகராட்சி நீரேற்று நிலையத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்குவதற்கு ஏதுவாக கூடுதலாக ஒரு மின்மாற்றியை அமைக்க மின்சார வாரிய கண்காணிப்புப் பொறியாளருக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஆத்தூரிலிருந்து திண்டுக்கல் வரை குடிநீர் செல்லும் குழாய் பாதையில் குடிநீர் கசிவு ஏற்பட்டுள்ள இடங்களைக் கண்டறிந்து அதனை சரிசெய்ய உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.அருண்மணி, வருவாய் கோட்டாட்சியர் எம். பெருமாள், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் ஸ்ரீரங்கராஜன், ஜெர்மன் சுந்தரம், ராஜேந்திரன், மின்சார வாரிய கண்காணிப்புப் பொறியாளர் ஆர். குமரேசன், நகராட்சி ஆணையர் அர. லட்சுமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.