மானாமதுரை, ஜூலை 9: இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேரூராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் நகர் செயலாளர் பாலபாரதி தலைமை தாங்கினார். கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.முத்தையா, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் கே.தங்கமணி, நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, சோணையா உள்ளிட்டோர் பேசினர்.
இலங்கை அதிபர் ராஜபட்சவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், இலங்கை ராணுவ முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை அவர்கள் விரும்பும் இடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.