விருதுநகர், ஜூலை 9: விருதுநகர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நான்கு வழிச்சாலையை இணைக்கும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நான்கு வழிச்சாலையை இணைக்கும் சாலை குண்டும், குழியுமாகப் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளது.
இந்த பஸ் நிலையத்தில் இருந்து நேராகச் சென்றால் ரயில்வே கேட் உள்ளது. அதனால் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில் துரித போக்குவரத்துக்கு என நான்கு வழிச் சாலையை இணைக்கும் வகையில் எம்.ஜி.ஆர். சாலை அமைக்கப்பட்டது.
புதிய பஸ் நிலையம் உருவாக்கப்பட்டபோது அமைக்கப்பட்ட இச்சாலையில் பராமரிப்புப் பணிகளே மேற்கொள்ளப்படவில்லை. இதனால், இச்சாலை தற்போது குண்டும், குழியுமாகச் சேதமடைந்து விட்டது.
கடந்த ஒரு வாரமாக பஸ் நிலையத்துக்கு வெளியூர் பஸ்கள் அனைத்தும் வந்து செல்கின்றன. இச்சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் பஸ்களின் டயர்கள் பழுதடைவதும் வாடிக்கையாகி விட்டது.
ஆகவே, இச்சாலையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.