ராமநாதபுரம், ஜூலை 9: ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 3100 மெ. டன் சான்று பெற்ற விதை நெல் விநியோகம் செய்யப்படுவதாக வேளாண்மை இணை இயக்குநர் சு.ராஜேந்திரன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் மட்டும் 3100 மெ. டன் சான்று பெற்ற நெல் விதைகள் வேளாண்மைத் துறை, கூட்டுறவுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. சான்று பெற்ற உயர் விளைச்சல் நெல் விதை, கிலோ ஒன்றுக்கு ரூ.5 வீதம் மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
அந்தந்த வட்டாரத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் விதை விற்பனையாளர்கள், வட்டார வேளாண்மை உதவி இயக்குநரின் ஆலோசனைப்படி போதுமான சான்று பெற்ற நெல் விதைகளை இருப்பு வைத்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்யுமாறும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இது தொடர்பாக, ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு மற்றும் தனியார் விதை
விற்பனையாளர்களுக்கு விதை விநியோகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திலும் விவரங்களை விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறோம் எனவும் வேளாண்மை இணை இயக்குநர் சு.ராஜேந்திரன் தெரிவித்தார்.
பேட்டியின் போது வேளாண் துணை இயக்குநர் க.சக்திமோகன் உடன் இருந்தார்.