மதுரை, ஜூலை 9: தமிழ்நாடு பார் கவுன்சில் வழக்கறிஞர் பதிவு செய்வதைத் தடுத்து, உயர் நீதிமன்றமே வழக்கறிஞர் பதிவு செய்ய வேண்டும் என தாக்கலான மனுவுக்கு, தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர், செயலர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த பி.ராமு தாக்கல்செய்த மனு விவரம்:
நான் பெங்களூரு சட்டக் கல்லூரியில் 3 ஆண்டு சட்டப்படிப்பு முடித்து, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டப்படிப்பு படித்தேன். பின்னர் வக்கீலாகப் பணிபுரிய பதிவு செய்ய தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர், செயலர் மற்றும் பார்கவுன்சில் என்ரோல்மென்ட் கமிட்டியிடம் விண்ணப்பித்தேன்.
இங்கு வழக்கறிஞராகப் பதிவு செய்ய சில விதிகளை வைத்துள்ளனர். அந்த விதிகள் மத்திய, மாநில அரசு கெஜட்டில் வெளியாகவில்லை. மேற்படி அமைப்பின் விதிகள் தனித்தனியாக உள்ளன. இவற்றுக்கென பொதுவான விதிகள் இல்லை. அவர்களது விதிகள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாக உள்ளன.
வழக்கறிஞராகப் பணிபுரிவதற்கான பதிவை உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து ஏற்க வேண்டும். தமிழ்நாடு பார் கவுன்சில் வழக்கறிஞரைப் பதிவுசெய்வதைத் தடுக்க வேண்டும். பார்கவுன்சில் ஏற்படுத்திய விதிகள் செல்லாது என அறிவிக்குமாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுதாகர், தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர், செயலர் மற்றும் உயர் நீதிமன்றப் பதிவாளர் ஆகியோர் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.