கொடைக்கானல், ஜூலை 9: கொடைக்கானலில் மன நல மருத்துவர்களின் வருடாந்திர மாநாடு நடைபெற்றது
தேசிய மன நல மருத்துவத் தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாநில மன நல நூடல் அதிகாரி டாக்டர் ராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மதுரை மருத்துவக் கல்லூரி மன நல மருத்துவத் தலைவர் ரவீந்திரநாத் வரவேற்றார்.
மாநாட்டில் புதிய தலைவராக பொறுப்பேற்று டாக்டர் ராமானுஜம் பேசியதாவது:
மன நல மருத்துவராக பணியாற்றுவதற்கு மருத்துவ கல்லூரி மாணவர்களிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. இந்த மாநாட்டில் 360 டாக்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். பழங்காலத்தில் பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றால் மன நிலை பாதிக்கப்பட்டு வருவதாக கூறினர். ஆனால் தற்போது மூளை பாதிப்பு அடைந்தால் மட்டுமே ஒருவர் மனநிலை பாதிப்பு அடைந்து வருகிறார் என்ற உண்மை கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
மூளையில் ஏற்படும் ஒருவித ரசாயன மாற்றம் மட்டுமே மனநிலை பாதிப்பு அடைவதற்கு காரணமாக விளங்குகிறது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்வதற்கு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
இந் நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட மருத்துவமனை இணை இயக்குநர் ஜெயபால், டாக்டர்கள் பாலகுருசாமி, அருண் மற்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். டாக்டர் குமணன் நன்றி கூறினார்.