பெரியகுளம், ஜூலை 14: தேனி மாவட்டத்தில் 11 அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. இவர்கள் அனைவரும் வியாழக்கிழமை பொறுப்பேற்றனர்.
தேனி மாவட்ட தலைமை அரசு வழக்கறிஞராக கடமலைக்குண்டுவைச் சேர்ந்த டி.கே.ஆர்.கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், 2011 முதல் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணிச் செயலராக பணியாற்றி வருகிறார். ஜெயலலிதா பேரவை செயலராகவும் பதவி வகித்துள்ளார். மேலும், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராகவும் பதவி வகித்துள்ளார்.
மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அரசு சிவில் வழக்கறிஞராக பி.ராஜமோகன் (போடி), சிறப்பு அரசு வழக்கறிஞராக ஏ.வெள்ளைச்சாமி (பெரியகுளம்), நில ஆர்ஜித அரசு வழக்கறிஞராக எஸ்.மனோகரன் (தேனி), வனத் துறை சிறப்பு அரசு வழக்கறிஞராக ஆர்.ஜெயபாரதி (அல்லிநகரம்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேனி சார்பு நீதிமன்றக் கூடுதல் அரசு வழக்கறிஞராக எம்.ஈஸ்வரன், பெரியகுளத்தில் உள்ள விரைவு நீதிமன்றக் கூடுதல் அரசு வழக்கறிஞராக பி.கதிர்வேல், சார்பு நீதிமன்றக் கூடுதல் வழக்கறிஞராக பி.செந்திக்குமரன், முன்சீப் நீதிமன்ற வழக்கறிஞராக கே.ஜி.பாலாஜி, உத்தமபாளையத்தில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் கூடுதல் வழக்கறிஞராக ஆர்.தங்கையா, முன்சீப் நீதிமன்ற வழக்கறிஞராக ஏ.தர்மராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் வியாழக்கிழமை பொறுப்புகளை ஏற்று பணிகளைத் தொடங்கினர்.