திண்டுக்கல், ஜூலை 14:÷திண்டுக்கல் அருகே உள்ள கருக்காப்பட்டியில் ஆற்றிலிருந்து அனுமதியின்றி செங்கல் சூளைக்கு நீர் எடுக்கப் பயன்படுத்திய மோட்டாரை பறிமுதல் செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார்.
÷திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை, வேடசந்தூர், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கு.நாகராஜன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
÷வடமதுரை ஒன்றியம், மூக்கரை பிள்ளையார் கோவில் கொல்லப்பட்டி கிராமத்தில் ஸ்ரீவிநாயகா மகளிர் சுய உதவிக் குழுவினர் ரூ.4 லட்சம் கடன் பெற்று செங்கல் சூளை அமைத்து தொழில் செய்வதைப் பார்வையிட்டார். உற்பத்திச் செய்யப்படும் செங்கல் தரமானதாக இருக்க வேண்டுமென்றும், சந்தைப்படுத்துதல் மற்றும் தொழில் ரீதியான நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கினார்.
÷தொடர்ந்து தென்னம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.4.76 லட்சம் செலவில் சீனிவாச சமுத்திர குளம் தெற்குப் பகுதி வாய்க்கால் மற்றும் குளம் தூர்வாரி கரையைப் பலப்படுத்தும் பணியினையும், ரூ.4.76 லட்சம் மதிப்பில் கவுண்டாயிகுளம் ஆழப்படுத்தி கரையை அகலப்படுத்தும் பணியினையும் ஆய்வு செய்தார்.
பின்னர், வேடசந்தூர் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி, ஆதி திராவிடர் நலத் துறை மாணவர் விடுதிகளைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், தரமான உணவு வழங்க வேண்டும், விளையாட்டுத் திடல் அமைக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். ஆதிதிராவிடர் நலத் துறை விடுதியில் உள்ள மாணவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியர், வகுப்பில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு தலா ரூ.500 பரிசுத்தொகை வழங்கப்படும் என தேரிவித்தார்.
÷கருக்காப்பட்டியில் ஆற்றின் கரையில் உள்ள செங்கல் சூளைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தபோது, அங்குள்ள 7 செங்கல் சூளைகளும் அனுமதியின்றி ஆற்றிலிருந்து சூளைக்கு மோட்டார் மூலம் நீர் எடுத்ததைக் கண்டறிந்து மோட்டார்களை பறிமுதல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
÷இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.அருண்மணி, உதவித் திட்ட அலுவலர் (சுய வேலை வாய்ப்பு) எம்.முருகேசன் கோட்டாட்சியர் கூ.வேலுச்சாமி, கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் பெ.ராதாகிருஷ்ணன், வட்டாட்சியர் மலைச்சாமி, பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளர் கோபி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.