உசிலம்பட்டி, ஜூலை 14: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த சாயப்பட்டறைக்கு சீல் வைக்கப்பட்டது.
உசிலம்பட்டி அருகே உள்ள செம்பட்டி கிராமத்தில் ராசு என்ற ஆங்கத்தேவர் தோட்டத்தில், பல்லடம் தாலுகா நல்லூர் பாளையத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் சிவசுப்ரமணியன் அனுமதியின்றி சாயப்பட்டறை நடத்தி வந்தார். இது சம்பந்தமாக, உசிலம்பட்டி கோட்டாட்சியர் புகழேந்திக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, உசிலை வட்டாட்சியர் ரவீந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் சின்னச்சாமி, கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரிய உதவிப் பொறியாளர் ராம்மோகன் ஆகியோர், காவல் துறையினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சோதனை செய்து, சாயப்பட்டறை இயந்திரம், துணி, நூல் பண்டல் ஆகியவற்றை மூடி சீல் வைத்தனர்.