ராமேசுவரம், ஜூலை 14: மாணவர்கள் பள்ளியில் செல்போன் பயன்படுத்தினால் உடனடியாக நீக்கப்படுவார்கள் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஏ.எஸ். ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்தார்.
அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் யோகா பயிற்சி முகாம் ஜூலை 8 முதல் 14 தேதி வரை நடைபெற்று வருகிறது.
இதில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் முதன்முதலாக ராமேசுவரம் புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான யோகா பயிற்சி முகாமை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை துவக்கி வைத்தார்.
இதில் பள்ளி தாளாளர் மைக்கேல்ராஜ் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் சேவியர் ராஜப்பா வரவேற்றார். என்எஸ்எஸ். திட்ட அலுவலர் ஜெயகாந்தன், பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் சூசைரெத்தினம், ராமநாதபுரம் மாவட்ட மனவளக் கலை அறக்கட்டளைச் செயலர் முருகேசன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் முதன்மைக் கல்வி அலுவலர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த சில தினங்களாக ராமநாதபுரம், பரமக்குடி கல்வி மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டேன். இதில் சில பள்ளியில் மாணவர்கள் வைத்திருந்த செல்போன்கள், ஆபாச புத்தகம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுபோன்ற செயலில் ஈடுபடும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். இதனைத் தடுக்க முதலில் பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவர்களைக் கண்காணிக்க வேண்டும் என அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளுக்கு சுற்றரிக்கை அனுப்பிட உள்ளேன்.
செல்போன் பயன்படுத்திய மாணவர்களின் பெற்றோர்களைச் சந்தித்துப் பேசியுள்ளேன். இதுபோன்ற செயலில் தொடர்ந்து ஈடுபடும் மாணவர்கள் அப் பள்ளியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள்.
மேலும், மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அரசு மற்றும் அரசு சார்ந்த அனைத்து பள்ளிகளிலும் திடீர் சோதனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.