மதுரை, ஜூலை 14: தேனி அல்லி நகரத்தில் பெண்ணிடம் நகை பறிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கில், தேனி மாவட்ட எஸ்.பி. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இது குறித்து, தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்த ராமுத்தாய் தாக்கல் செய்த மனு:
கடந்த 29.5.2011 இரவு 10.30 மணிக்கு நாகராஜ் உள்ளிட்டோர், வீட்டில் இருந்த என்னைத் தாக்கி, நான் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையைப் பறித்துச் சென்றுவிட்டனர். அப்போது, கழுத்தில் காயம் ஏற்பட்டது. இது குறித்து, தேனி காவல் நிலையத்தில் புகார் செய்தேன்.
அவர்கள் 17 பேர் மீது பல்வேறு குற்றப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். அதில் நடவடிக்கை இல்லை. உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடவேண்டும் என, அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கின் தற்போதைய நிலையை அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, மனுதாரர் புகாரில் உண்மையில்லை என்றும், அந்தக் குற்ற வழக்கை முடித்துவிட்டதாகவும் அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.
இநத மனு, நீதிபதி ஆர். மாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்படி இருக்கும்போது வழக்கை எப்படி முடித்தீர்கள் என அரசு வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்டார் நீதிபதி. பின்னர், இது தொடர்பாக, தேனி மாவட்ட எஸ்.பி. நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டார்.