தேனி, ஜூலை 14: தேனி மாவட்டத்தில் சட்டப் பேரவை மனுக்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாவட்டத்திற்கு உள்பட்ட பொதுப் பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் ஜூலை 25-ம் தேதிக்குள் மனு அனுப்பலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள தனி நபர்கள், நிறுவனங்கள், சங்கங்கள் தீர்க்கப்பட வேண்டிய பொதுப் பிரச்னைகள் குறித்த மனுக்களை தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டப்பேரவை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு ஜூலை 25-ம் தேதிக்குள் அனுப்பலாம். மனுக்களில் மனுதாரர்கள் கையெழுத்திட்டு 5 நகல்கள் அனுப்ப வேண்டும்.
தனிநபர் குறை, நீதிமன்றத்தில் வழக்கில் உள்ள பொருள், வேலைவாய்ப்பு, பட்டா, முதியோர் ஓய்வூதியம், வங்கிக் கடன், தொழில் கடன், அரசு பணியிட மாற்றம், அரசு அலுவலர்களின் குறைபாடு ஆகியவை குறித்து மனு அளிக்கக் கூடாது. அரசு அலுவலகங்களில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ள பொதுப் பிரச்னைகள் குறித்து மனு அளிக்கலாம். மனுவில் குறிப்பிட்ட ஒரு பிரச்னை குறித்தும், ஓரே துறையைச் சார்ந்த பிரச்னை குறித்தும் தெரிவிக்க வேண்டும்.
சட்டப் பேரவை விதிகளுக்கு உள்பட்ட மனுக்கள் ஆய்வுக்கு ஏற்கப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.