விருதுநகர், ஜூலை 14: பள்ளி மாணவ, மாணவியர் நன்றாகப் படித்தால் நினைத்ததை சாதிக்கலாம் என விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்க தாகூர் தெரிவித்தார்.
எஸ்.எல்.எல்.சி., பிளஸ் 2 தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்குப் பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கும் நிகழ்ச்சி விருதுநகர் கேவிஎஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் மாணிக்க தாகூர் எம்.பி. பேசியதாவது:
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கும் நிகழ்ச்சி 2009-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிலும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வில் மாநில, மாவட்ட அளவிலும், பள்ளி அளவில் முதன் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.
மாணவ, மாணவிகள் நன்றாகப் படித்தால் நினைத்ததை சாதிக்கலாம். அதனால் நீங்கள் சிறப்பிடங்களைப் பிடிப்பதற்குக் கடுமையாக உழைக்க வேண்டும். தங்கள் பள்ளியில் படித்து வரும் அனைத்து மாணவ, மாணவிகளும் முதலிடம் பெற வேண்டும் என்கிற முறையில் ஆசிரியர்கள் உழைத்திருப்பார்கள்.
மேலும் 100 சதவீதம் முதல் 80 சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கு சிறப்பு செய்யும் வகையில் இந்தாண்டிலிருந்து காமராஜர் விருது வழங்கப்படும்.
வரும் செப்டம்பர் 5-ம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தன்று மத்திய அமைச்சர் முன்னிலையில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என மாணிக்க தாகூர் எம்.பி. தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 1800 பேருக்கு காமராஜர் விருதுகளை எம்.பி. வழங்கினார்.
மேலும் பாண்டியன் கிராம வங்கியின் இயக்குநர் பாலகிருஷ்ணன், முன்னாள் மாநில இளைஞரணித் தலைவர் நவீன், ஐ.என்.டி.யூ.சி தலைவர் பாலசுப்பிரமணியன், பேரூராட்சித் தலைவர் கே.கே.குருசாமி, மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.