மதுரை, ஜூலை 14: சிவகங்கை மாவட்டம், வைகை ஆற்றில் மணல் குவாரி தொடங்குவதற்கு எதிரான மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தற்போதைய நிலையிலேயே தொடந்து வைத்திருக்குமாறு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், லாடனேந்தலைச் சேர்ந்த வி. ராஜா தாக்கல் செய்த மனு:
பாப்பாகுடி, தளி, செல்லப்பனேந்தல் பகுதியில் வைகை ஆற்றுப் பாசனத்தில் 700 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
இந்த கிராமங்களைச் சுற்றிலும் சிவகங்கை வனத்துறையினர் 37 ஹெக்டேர் நிலப்பரப்பில் 7,000 தேக்கு மரங்களை கடந்த ஓராண்டாக வளர்த்து வருகின்றனர்.
மேலும், இந்த கிராமங்களுக்கு அருகில் வைகை ஆற்றிலிருந்து குடிநீர் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சுற்று வட்டாரம் மற்றும் மணலூர், திருப்புவனம், மடப்புரம், மேலராங்கியம், கீழராங்கியம் உள்ளிட்ட கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகமும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாப்பாகுடி, தளி, செல்லப்பனேந்தல் ஆகிய கிராமங்களுக்கு அருகில் வைகை ஆற்றில் மணல் குவாரி தொடங்க பொதுப்பணித் துறையின்ர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பகுதியில் சுமார் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் வைகையில் தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் மணல் குவாரி அமைத்து மணல் எடுக்கப்பட்டால், மேற்கண்ட அனைத்தும் பாதிக்கப்படும். வைகை அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீர் எங்கள் பகுதிக்கு வந்து சேர்வதில்லை. மணல் குவாரியால் தண்ணீர் வரத்து பாதிக்கப்படும்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு, சிவகங்கை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறையினருக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. எங்கள் கிராமப் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் மணல் அள்ளத் தடைவிதிக்கவேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.பி.எஸ். ஜனார்த்தனராஜ், எம்.எம். சுந்தரேஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை வைகை ஆறு தற்போது எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மேலும், இந்த மனுவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர், புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரி, பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் ஆகியோர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.