சாத்தூர், ஜூலை 23: அரசு கல்லூரிகளில் தனியாருக்கு இணையான தரமான கல்வி அளிக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
முதல்வர் ஜெயலலிதா சென்னை கோட்டையில் ஜூலை 18-ம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சாத்தூர் அரசு கலைக் கல்லூரியை தொடக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து அன்றைய தினமே இக்கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவத்தை ஆட்சியர் மு.பாலாஜி வழங்கி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து மேலும் 150 மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் சாத்தூர் அரசு கலைக் கல்லூரியில் சேருவதற்கு மேலும் 62 மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கைப் படிவம் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மு.பாலாஜி தலைமை வகித்தார். ராஜேந்திர பாலாஜி எம்.எல்.ஏ., மதுரை காமராஜர் பல்கலைகழகப் பதிவாளர் ராஜ்ஜியகொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் செல்லதுரை வரவேற்றார்.
இதில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியில் சேர்க்கைக்கான படிவத்தை வழங்கிப் பேசியதாவது:
அரசு பொதுத் தேர்வில் விருதுநகர் மாவட்டம் கடந்த 25 ஆண்டுகளுக்குமேல் முதன்மையாகத் திகழ்ந்து வருகிறது.
தமிழகத்தில் உயர் கல்வி உலகத்தரம் வாய்ந்த கல்வியாகத் திகழ வேண்டும் என்பதற்காகத் தமிழகத்தில் 9 அரசு கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. அரசு கல்லூரிகளில் தனியாருக்கு இணையான தரமான கல்வி அளிக்கப்படும்.
மாவட்டத்தின் மையப் பகுதியாகவும், பஸ், ரயில் போக்குவரத்து உள்ள நகரமாகவும் இருப்பதால் சாத்தூரில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக அரசு கலைக் கல்லூரி விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் சாத்தூர் சட்டமன்ற அதிமுக பொறுப்பாளர் சேதுராமனுஜம், நகர அதிமுக செயலாளர் வாசன், ஒன்றியச் செயலாளர் சுப்பாராம், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.