தேவகோட்டை, ஜூலை 23: தேவகோட்டை வட்டம், கல்லல் காவல் சரகத்துக்குள்பட்ட அரண்மனை சிறுவயலில் இளைஞர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அரண்மனை சிறுவயலைச் சேர்ந்த கருப்பையா மகன் ரமேஷ். இவருக்குத் திருமணமாகி, மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர் மீது கல்லல் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் ஏற்கெனவே நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வியாழக்கிமை இரவு இவர் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இரவு வீட்டுக்குச் சென்றவர் சனிக்கிழமை காலையில் பார்த்தபோது வீட்டருகில் இறந்து கிடந்தாராம். அவரது முகம் மற்றும் சில இடங்களில் காயம் இருந்துள்ளது.
மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் கண்ணன், தேவகோட்டை டி.எஸ்.பி.கணேசன் ஆகியோர் அங்கு சென்று விசாரித்தனர்.
கல்லல் சார்பு ஆய்வாளர் குணசேகரன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.