மதுரை, ஜூலை 23: மதுரை மாவட்ட பணி நிறைவு பெற்ற உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் கடந்த 13ம் தேதி நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்டத் தலைவர் எஸ்.ராஜூ தலைமை தாங்க, மாவட்டச் செயலர் எ.நாகப்பன் சங்க செயல்பாடுகள் பற்றி விளக்கினார். பொருளாளர் வி.கிருஷ்ணமூர்த்தி நிதிநிலை அறிக்கை அளித்தார்.
பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட 80-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்களின் சமச்சீர் கல்விப் பாடத் திட்டம் பற்றி கருத்துரைகளும் கலந்துரையாடல்களும் நடைபெற்றது.
சமச்சீர்கல்விப் பாடத்திட்டத்தை 2011-2012-ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த வேண்டும். சமச்சீர்கல்விப் பாடப் புத்தகங்களில் தேவையில்லாத பாடப்பகுதிகளை நீக்கிவிட்டு தயார் நிலையிலுள்ள சமச்சீர் பாடப் புத்தகங்களை அனைத்து வகுப்புகளுக்கும் தமிழக அரசு இந்தக் கல்வி ஆண்டே வழங்க வேண்டும்.
குறைபாடுகளைக் களைய கல்வியாளர்களைக் கொண்டே ஒரு நிபுணர் குழு அமைத்து சேர்க்கை நீக்கல்களை அறிந்து ஆய்வு செய்து மேலும் செழுமைப்படுத்தி தரமிக்க பாட நூல்களை அனைத்து வகுப்புகளுக்கும் தொடர்ந்து வெளியிட வேண்டும் என உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.