விருதுநகர், ஜூலை 23: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் கல்விக் கடன் வழிகாட்டு மையங்கள் மூலம் தேவையான உதவி பெறலாம் என மாணிக்க தாகூர் எம்.பி. தெரிவித்தார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதி அலுவலகத்தில் மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் கல்விக் கடன் வழிகாட்டு மையத்தை மாணிக்க தாகூர் எம்.பி. சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விருதுநகர் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் கடந்தாண்டு 18 கல்வி மையங்கள் தொடங்கப்பட்டன. அதன் மூலம் தொழிற் கல்வி உள்பட பல்வேறு படிப்புகளைத் தொடர்ந்து படிக்க வங்கிக் கடன் பெற வழிகாட்டுவதாக அமைந்தது. இந்தாண்டு 22 கல்விக் கடன் வழிகாட்டு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இப்பகுதியில் கல்லூரி, தொழிற் கல்வி படித்து வரும் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்குத் தேவையான விண்ணப்பம் அளிப்பது, அதை எப்படி பூர்த்தி செய்து கொடுப்பது, இன்னபிற சான்றிதழ்கள் இணைப்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும்.
கடன் பெறுவதற்கான அனைத்து தகவல்களும் அளிக்கப்படும். இக்கடனை வங்கிகளில் குறைந்த வட்டியில் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
வங்கிக் கடன் விண்ணப்பம் செய்தவர்களுக்கு ஏன் கிடைக்கவில்லை என்கிற விவரமும் அலுவலகம் மூலம் தகவல் சேகரிக்கப்படும்.
எந்த வங்கியில் கடன் தர மறுக்கப்படுகிறதோ அக்கிளை மேலாளர்கள் குறித்து நிதித் துறை அமைச்சருக்கு தகவல் தெரிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அப்போது ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், நகராட்சித் தலைவர் கார்த்திகா கரிக்கோல்ராஜ், கவுன்சிலர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.