ராமநாதபுரம், ஜூலை 23: ஜவுளி ரகங்களுக்கு வாட் வரியை தமிழக அரசு ரத்து செய்யக் காரணமாக இருந்தவர்களுள் ஒருவரான, ராமநாதபுரம் மாவட்ட ஜவுளி மற்றும் ரெடிமேட் சங்கத் தலைவருக்கு அச்சங்க நிர்வாகிகள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
ராமநாதபுரம் வியாபாரிகள் சங்கக் கட்டடத்தில் நடந்த இவ்விழாவிற்கு அம்பலவிலாஸ் கோ. ரமேஷ்பாபு தலைமை வகித்தார்.
சங்கச் செயலாளர் பரிதா சுபைர், பொருளாளர் சாந்திகணேசன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாவட்டத் தலைவர் வைகிங் எம்.எஸ். கருணாநிதிக்கு சங்கத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அவர் ஏற்புரையாற்றுகையில் கூறியதாவது:
ஜவுளி மற்றும் ரெடிமேட் சங்க மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் இணைந்து, சென்னை எக்மோர் எம்.எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் கூடி, அரசு ஜவுளி ரகங்களுக்கு வரியை உயர்த்தியதைக் கண்டித்து போராட்டம், கடையடைப்பு செய்யாமல் அமைச்சர்களை சந்தித்து பேசுவது என முடிவு செய்தோம்.
இதனைத் தொடர்ந்து நான், நெல்லை கணேஷ், ஈரோடு அருணாசலம் உள்ளிட்ட 3 பேரும் இணைந்து, தமிழக அரசின் செயலாளர் சுணில் பாலிவால், வணிகவரித்துறை அமைச்சர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரைச் சந்தித்து வரி விதிப்பை ரத்து செய்யும்படி கேட்டுக் கொண்டோம்.
இதுவரை, இவ்வாறு வரி உயர்த்தப்பட்டதே இல்லை என்பதையும் எடுத்துக் கூறினோம்.
இதன் விளைவாக அமைச்சர்கள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றதால், தமிழக முதல்வர் அமைச்சரவையை கூட்டி கடந்த 12.7.11 முதல் முன் தேதியிட்ட ஜவுளி ரகங்களுக்கும் வாட் வரி விதிப்பை ரத்து செய்துள்ளார்.
இதற்காக சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம் என்றார்.
விழா ஏற்பாடுகளை சேது ஏஜென்ஸி மேலாளர் முருகன் செய்திருந்தார்.
ஜவுளி மற்றும் ரெடிமேட் வியாபாரிகள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.