மதுரை, ஜூலை 23: மதுரை மாவட்டத்தில் தாட்கோ மூலம் நடத்தப்படும் திறன் வளர்ப்பு இலவச பயிற்சியில் சேர விரும்புவோர், இம் மாதம் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் உ. சகாயம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கை விவரம்:
மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உணவு தயாரித்தல், உணவு பதப்படுத்துதல் மற்றும் பறிறிமாறுதல் குறித்த ஓராண்டுப் பயிற்சி நடத்தப்பட உள்ளது. தாட்கோ மூலம் நடத்தப்படும் இந்தப் பயிற்சியில், இந்து ஆதிதிராவிடர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர்கள் கலந்து கொள்ளலாம்.
பயிற்சி பெறுவோருக்கு மாதம்தோறும் ரூ. 400 வீதம் உதவித் தொகை வழங்கப்படும்.
பயிற்சியில் சேர விரும்புவோர் 18 வயது முதல் 35 வயதிற்குள்பட்டவராக இருக்க வேண்டும். குறைந்தது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சியின்மை பெற்றவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள் தாட்கோ அலுவலகத்தில் அல்லது பயிற்சி அளிக்க உள்ள மதுரை உத்தங்குடியில் அமைந்துள்ள ஓரியண்டல் இன்ஸ்டியூட் ஆப் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் ஹோட்டர் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தில் விண்ணப்பங்களைப் பெற்று, உரிய சான்றுகளுடன் இம் மாதம் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றார் ஆட்சியர்.