மதுரை, ஜூலை 23: மதுரையில் தேவதாஸ் சிறப்பு மருத்துவமனையில் நவீன முறையில் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த மருத்துவமனை இயக்குநர் டாக்டர் சதீஷ் தேவதாஸ் தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியது:
காலில் மூட்டுப் பகுதியில் உள்ள குருத்தெலும்பு தேய்வினால் அதன் அடியிலுள்ள எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசி வலியும் வீக்கமும் ஏற்பட்டு மூட்டு செயல் இழக்கிறது. பிறகு நடப்பதற்கே கடினமாகி விடுகிறது.
பொதுவாக உடல் பருமனாக இருப்பது, இந்திய முறையிலான கழிப்பறையைப் பயன்படுத்துவது, அதிக நேரம் நின்றுகொண்டே வேலை செய்வது, உரிய உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களால் சுமார் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிகமாக இந்த நோய் தாக்குகிறது.
எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மூலம் இந்த நோயைக் குணப்படுத்தலாம்.
தற்போது அதிநவீன சிகிச்சையாக கணினி முறையிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இச்சிகிச்சையில் கணினியே வேண்டிய இடத்தில் துளையிட்டு, அளவையும், பாதையையும் கணித்துக்கொடுக்கும். இதனால் அருகில் உள்ள நரம்புகளுக்கும், ரத்தக் குழாய்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்வதற்கு வழிவகுத்துக் கொடுக்கும். இடும்பு மாற்று அறுவை சிகிச்சையும் நவீனமாக்கப்பட்டுள்ளது.
இதில், செராமிக் என்ற உலோகம் பயன்படுத்துவதன் மூலம் அறுவை சிகிச்சைக்கு பின்னரும் தரையில் உட்கார முடியும். பழைய மற்றும் நவீன முறையில் கடந்த 10 ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் இந்த மருத்துவமனையில் நடைபெற்றுள்ளன என்றார்.