ராமேசுவரத்தில் விரைவில் மெகா திட்டம்: ஆட்சியர்

ராமேசுவரம், ஜூலை 23:    ராமேசுவரத்தில் மெகா திட்டம் மூலம் விரைவில் பல்வேறு நலப்பணிகள் செயல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண்ராய் சனிக்கிழமை தெரிவித்தார்.  புனித தலமான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோ
Published on
Updated on
1 min read

ராமேசுவரம், ஜூலை 23:    ராமேசுவரத்தில் மெகா திட்டம் மூலம் விரைவில் பல்வேறு நலப்பணிகள் செயல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண்ராய் சனிக்கிழமை தெரிவித்தார்.

 புனித தலமான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சேதமடைந்த தங்கம், வெள்ளி வாகனங்கள், தங்கம், செம்பு சிலைகள் ஆகியவற்றை சரி செய்து பக்தர்கள் இடையூறின்றி தரிசனம் செய்ய தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும்படி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

  அதன்படி கடந்த சில நாள்களுக்கு முன்பு, இந்து அறநிலைத்துறை தலைமை ஸ்தபதி, கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

 இதன்பின்னர் தங்கம், வெள்ளி வாகனங்களை பளபளப்பாகும் பணி நடந்து வருகிறது.

  இதனை ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் அருண்ராய் சனிக்கிழமை ராமேசுவரம் கோயிலுக்கு வருகை தந்தார். பக்தர்கள் புனித நீராடும் 22 தீர்த்தங்களையும் ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார்.

 பின்னர் தூய்மைபடுத்திய தங்கம், வெள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார்.

 இதனைத் தொடர்ந்து கோயிலில் தரிசனம் செய்து விட்டு, பக்தர்கள் இலவசமாக தங்கும் விடுதி, இலவச கழிப்பறைகளை பார்வையிட்டார்.

 பின்னர் பக்தர்களின் வசதிக்காக இன்னும் பல்வேறு பணிகளை செயல்படுத்தும்படி கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கத்திடம் வலியுறுத்தினார்.

 பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 ராமேசுவரம் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

 பக்தர்கள் வசதிக்காகவும், இங்கு வசிக்கும் பொதுமக்களின் வசதிக்காகவும் ராமேசுவரத்தில் பாதாளச் சாக்கடைத் திட்டம் விரைவில் துவக்கப்படும்.

 அக்னி தீர்த்தக் கடலில் கலக்கும் கழிவுநீரைத் தடுத்து நிறுத்தி, இயந்திரம் மூலம்  கழிவுநீர் சுத்திகரிக்கப்படும். பின்னர் சுத்திகரித்த நீரை அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்து தூரத்தில் அமைந்துள்ள பூங்காவிற்கு கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

  மேலும் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஒதுங்கும் கழிவுத் துணிகளால் கடலோரத்தில்  சுற்றுச் சூழல் மாசுப்பட்டுள்ளது.

எனவே, அக்னி தீர்த்தக் கடற்கரையை ஆண்டு முழுவதும் சுத்தம் செய்யும் பணியை ஏற்றுக் கொள்வதாக ராமேசுவரம் ரோட்டரி சங்கம் கேட்டு கொண்டது.

 அதன்படி சுத்தம் செய்யும், பணி ரோட்டரி சங்கத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

கோயிலில் நான்கு ரத வீதியிலும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும் கோயில் மற்றும் நகராட்சிப் பகுதியில் மெகா திட்டத்தின் மூலம் பல்வேறு  நலப்பணிகள் விரைவில் அமல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

 பேட்டியின் போது, கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், உதவி கோட்டப் பொறியாளர் மயில்வாகணன், வட்டாட்சியர் கணேசன், நகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், பொறியாளர் ரெத்தினவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.