திண்டுக்கல், ஜூலை 30: ஆடி அமாவாசையை முன்னிட்டு, சின்னாளபட்டி வடக்குத் தெருவில் உள்ள ஸ்ரீஉண்ணாமுலை சமேத அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள பிரத்யங்கிரா தேவி சந்நதியில் சிறப்பு அஷ்ட பிரத்யங்கிரா யாகம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் அம்மனுக்கு மகாயாகம் நடைபெறுவது வழக்கம். இந்த மாதம் ஆடி அமாவாசையையொட்டி, பிரத்யங்கிரா தேவி கோயில் முன்புள்ள யாக குண்டத்தில் அரசு, சந்தனம், பலா, தேக்கு மரக் குச்சிகள் இட்டு, நெய் ஊற்றி அக்னி ஏற்றப்பட்டு சிறப்பு யாகம் ஆரம்பமானது. வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத பகல் 11.45 மணியளவில் மூட்டை, மூட்டையாக மிளகாய், எலுமிச்சை, மாதுளை, பலா சுளை, வில்வம் பழம், திராட்சை, தேன் ஆகியவை யாகத்தில் இடப்பட்டன. பின்னர், பிரத்யங்கிரா தேவிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
யாகத்துக்கான ஏற்பாடுகளை, தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் தலைமை குருக்கள் ஜவஹர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.
திண்டுக்கல், மதுரை, தேனி, வத்தலகுண்டு, போடி, கம்பம், பழனி ஆகிய ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்று, அம்மனை தரிசித்துச் சென்றனர். நிர்வாகக் கமிட்டி சார்பாக அன்னதானம் நடைபெற்றது.