மேலூர், ஜூலை, 30: ஆடி அமாவாசையையொட்டி அழகர்கோவில் மலை மீதுள்ள நூபுரகங்கை தீர்த்தத்தில் ஏராளமானோர் சனிக்கிழமை புனித நீராடினர்.
ஆடி மாதத்தில் அமாவாசை தினத்தில் புனித நீராடல் என்பது மக்களது பாரம்பரிய பழக்கமாகும். இதையொட்டி ஆயிரக்கணக்கானோர் மலை மீது திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து நூபுரகங்கை தீர்த்தத்தில் நீராடினர். இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சோலைமலை முருகன் கோயிலிலும் பக்தர்கள் விளக்கேற்றி முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
கள்ளழகர் திருக்கோயிலில் பெருமாளுக்கும், தாயார், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர் மற்றும் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். மதுரை, மேலூர், நத்தத்திலிருந்து கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
திருவாதவூர் திருமறைநாதர் சமேத வேதநாயகி அம்மன் கோயிலில் ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருமறைநாதருக்கு பால், இளநீர், தயிர், தேன். பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன.
யானைமலை, யோகநரசிம்மர் திருக்கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது. பெருமாள், மகாலட்சுமி சன்னதியில் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். அருகிலுள்ள பிரத்யங்கிராதேவி கோயிலிலும் பக்தர்கள் யாக பூஜையில் மிளகாய் வற்றலை அர்ப்பணித்து வழிபட்டனர்.
மீனாட்சி அம்மன்கோயில்: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் ஆடி வீதியில் ஆடி அமாவாசையொட்டி முன்னோர்களுக்கான பிதுர் கர்மா பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதற்கான சிறப்பு பூஜைக்கு ஆடி வீதியில் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.