உசிலம்பட்டி, ஜூலை 30: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் சிறப்பு என்.சி.சி. முகாம் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
திண்டுக்கல் 14-வது பட்டாலியன் மற்றும் தேசிய மாணவர் படை, ப.மு. தேவர் கல்லூரி இணைந்து நடத்திதிய இந்த முகாமுக்கு லெப்டினன்ட் கர்னல் வேணுகோபால் மேனன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக கல்லூரி முதல்வர் பால்ச்சாமி, கல்லூரித் தலைவர் மாசாணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தேசிய மாணவர் படை பிரிவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட என்.சி.சி மாணவர்களுக்கு 2012 ஜனவரியில் புதுதில்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்ள சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் துப்பாக்கி சுடும் பயிற்சி, உலக வரைபட பயிற்சி, மரக்கன்று நடுதல், யோகா, களப்பணியில் ஈடுபடுதல் போன்றவற்றில் ஈடுபட்டனர்.
திருச்சி, கோவை, மதுரை, சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களிலிருந்து தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் 800 பேர் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டனர். முகாம் 10 நாள் நடைபெற்றது.
நிறைவு விழாவில் மாணவ, மாணவியரின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பாக செயல்பட்ட தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.