மதுரை, ஜூலை 30: கிராம ஊராட்சிகளின் நிதியை விதிமுறைகளை மீறி செலவழித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் எச்சரித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட மின்வாரிய ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய ஆட்சியர் மேலும் பேசியது:
மின் கட்டணம் நிலுவையில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் ஒரு வாரத்துக்குள் அதை செலுத்த வேண்டும். மின் கட்டணம் பாக்கி இல்லாமல் செலுத்தியுள்ள திருமங்கலம் நகராட்சி அலுவலரின் செயல் பாராட்டத்தக்கது.
இதேபோல் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாதமும் மின்கட்டணம் செலுத்திய அறிக்கையை உள்ளாட்சி அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்துக்கு அளிக்க வேண்டும். விவசாயத்துக்கு மின் இணைப்பு கேட்டுள்ள விவசாயிகளுக்கு விரைவாக இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்ளாட்சிகளின் நிதி ஆதாரத்தைப் பெருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கால்வாய், வரத்து கால்வாய் பகுதிகளை பாதுகாக்க வேண்டும்.
குளத்துக் கரைகளில் அதிக அளவில் மரங்களை வளர்க்க வேண்டும். பொறுப்பற்ற முறையில் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் கண்டிக்கதக்கவை.
பல கிராமங்களில் நூலகங்கள் இயங்கவில்லை. அவற்றை நெறிப்படுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அவற்றை நெறிப்படுத்த வேண்டும். கிராம ஊராட்சிகளில் உள்ள நீர்நிலைகள் மூலம் வருவாய் பெறுவதற்கு பல வழிமுறைகள் உள்ளன. ஆனால் அவற்றை கிராம ஊராட்சி நிர்வாகங்கள் பயன்படுத்துவதில்லை.
கிராம ஊராட்சியில் நிதிகளை ஊராட்சித் தலைவர்கள் முறையாகப் பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும். விதிகளை மீறி செயல்படும் ஊராட்சித் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.