மதுரை, ஜூலை 30: மதுரை மாவட்டத்தில் 4 இடங்களிள் சனிக்கிழமை நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குழு உறுப்பினர்கள் ச.சேவியர் சேசுராஜா, கே.கே.ராஜா, மாவட்ட வருவாய் ஆய்வாளர் ப. முருகேஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்த மாவட்டத்தில் மதுரையில் 79 கல்வி நிறுவனங்களிலும், மேலூரில் 5 கல்வி நிறுவனங்களிலும், திருமங்கலத்தில் 9 கல்வி நிறுவனங்களிலும், உசிலம்பட்டியில் 6 கல்வி நிறுவனங்களிலும் என மொத்தம் 99 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இங்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த 30,969 பேரில் 24,566 பேர் தேர்வு எழுதினர். இது 79.32 சதவீதம் ஆகும்.
தேர்வை மேற்பார்வை செய்ய 21 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவர்கள் தேர்வு மையங்களுக்குச் சென்று மேற்பார்வை செய்தனர். மேலும், வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் நிலையில் உள்ள அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தேர்வைக் கண்காணித்தனர்.
தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. தடையற்ற மின்சாரம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 6,695 காலிப் பணியிடங்களுக்கு மொத்தம் 4.80 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர்.