மதுரை, ஜூலை 30: மதுரை சிந்தாமணி, சின்னஅனுப்பானடி ஊராட்சி குப்பை, கழிவுநீரை கோயில் ஊருணியில் சேர்வதைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ. அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இதுகுறித்து, சிந்தாமணியைச் சேர்ந்த செல்லப்பன் தாக்கல் செய்த மனு:
சிந்தாமணி காமாட்சி அம்மன் கழுவடையான் கோயிலுக்கு முன் ஊருணி உள்ளது. இந்த ஊருணி 100 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது. புனிதமாக இருந்த இந்த ஊருணியில் சின்னஅனுப்பானடி ஊராட்சி, சிந்தாமணி ஊராட்சிப் பகுதிகளில் சேரும் குப்பையைக் கொட்டி ஊருணியைத் தூர்ந்து போகச் செய்து வருகின்றனர்.
மேலும் இப்பகுதி கழிவுநீரும் ஊருணியில் பாய்கிறது. இதனால், கோயில் ஊருணியின் புனிதம் பாதிக்கப்பட்டுவிட்டது. குப்பை கொட்டுவதைத் தடுக்கவும், கழிவுநீரை வேறு பகுதிக்குத் திருப்பிவிடவும் நடவடிக்கை எடுக்குமாறு திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் மனு அளித்தேன். அதில் நடவடிக்கை இல்லை. குப்பை கொட்டுவதைத் தடுக்கவும், கழிவுநீர் பாய்வதைத் திருப்பிவிடவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.ஜோதிமணி, துரைசாமி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையர், மனுதாரர் மனு மீது எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அரசு வழக்கறிஞர் விளக்கம் பெற்று நீதிமன்றத்துக்குத் தெரிவிக்குமாறு அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டது.