கீழக்கரை, ஜூலை 30: கீழக்கரையில் பத்திரப் பதிவு அலுவலகம் முன்பு தில்லையேந்தல் ஊராட்சித் தலைவரைக் கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தில்லையேந்தல் ஊராட்சிக்கு உள்பட்ட கீழக்கரை அருகே உள்ள 500 பிளாட் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரியும், மேலும் அப்பகுதியை கீழக்கரை நகராட்சியோடு இணைக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, டி.என்.டி.ஜே. மாவட்டத் தலைவர் சுஹைபுல்லா தலைமை வகித்தார்.
நகர் தலைவர் பசல்முகம்மது, மாவட்டச் செயலாளர் அனீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலச் செயலாளர் அப்துல்ஹமீது சிறப்புறையாற்றினார்.
இதில் அமைப்பின் நிர்வாகிகள் காதரியா, ஜகுபர், இம்ரான்கான் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.