ராஜபாளையம், ஜூலை 30: தளவாய்புரத்தில் ஊராட்சி சார்பில் நீர்பிடிப்புள்ள பொதுஇடத்தை ஆக்கிரமித்துக் கட்டிய கடைகள் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
தளவாய்புரம் நீர்பிடிப்புள்ள பகுதிóயில் 80-க்கும் மேற்பட்ட கடைகளைக் கட்டி ஊராட்சி மன்றம் வாடகைக்கு விட்டுள்ளது. இக்கடைகள் நீர்பிடிப்புப் பகுதியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாக ராஜபாளையம் வட்டாட்சியருக்குப் புகார் அனுப்பப்பட்டது.
வட்டாட்சியர் நிர்மலா கடைகளை நேரில் ஆய்வு செய்து நீர்பிடிப்புப் பகுதியில் கட்டப்பட்டுள்ளதை உறுதி செய்தார். இக்கடைகளை ஜூலை 25-ம் தேதிக்குள் இடிக்க தளவாய்புரம் ஊராட்சித் தலைவர் கணேஷ்வரிக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
தளவாய்புரம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இதில் இப்பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. கடைகளை இடித்தால் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள், ஆகையால் கடைகளை இடிக்கக்கூடாது எனத் தீர்மானம் நீறைவேற்றப்பட்டு வட்டாட்சியருக்கு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2 நாள்களுக்கு முன்னர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சிவகாசி கோட்டாட்சியர் முனுசாமி, வட்டாட்சியர் நிர்மலா, ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மேரி எஸ்தர்ராணி, தளவாய்புரம் ஊராட்சித் தலைவர் கணேஷ்வரி, துணைத் தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதில் நீர்பிடிப்புப் பகுதியில் கட்டப்பட்டுள்ள கடைகளை இடிக்க முடிவு செய்யப்பட்டது.
நீர்பிடிப்புப் பகுதியில்ல் கட்டப்பட்டுள்ள கடைகள் சனிக்கிழமை இடிக்கப்பட்டன. சிவகாசி கோட்டாட்சியர் முனுசாமி, ராஜபாளையம் டி.எஸ்.பி. கண்ணன், வட்டாட்சியர் நிர்மலா ஆகியோர் மேற்பார்வையில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டன.