சிவகாசி, ஜூலை 30: மாணவிகளிடையே வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கில், சிவகாசி இந்து நாடார்கள் பெண்கள் நடுநிலைப் பள்ளியில் பள்ளி நிர்வாகம் சார்பில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. தாளாளர் சி.ஆர்.வேலாயுதம் தொடக்கிவைத்தார். கண்காட்சியில் தலைவர்களின் வாழ்கை வரலாறு புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.
தூய இன்னாசியார் ஆலயத்தில் திருவிழா
விருதுநகர், ஜூலை 30: விருதுநகர் தூய இன்னாசியார் ஆலயத்தின் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விருதுநகரில் உள்ள கத்தோலிக்கக் கிறிஸ்துவ ஆலயமான தூய இன்னாசியார் ஆலயத் திருவிழா 10 நாள் நடைபெற உள்ளது. இத்திருவிழாவையொட்டி மதுரை வடக்கு மாவட்ட மறைவட்ட அதிபர் அந்தோனிராஜன், விருதுநகர் மாவட்ட தூய இன்னாசியார் ஆலயத்தின் பங்குத் தந்தையுமான ஆரோக்கியம் அடிகளார் ஆகியோர் கொடியேற்றி தொடங்கி வைத்தனர்.
இவ்விழாவை முன்னிட்டு தினமும் மாலை திருப்பலியும், மறையுரையும் நடைபெறும்.திருவிழாவில் 9-ம் நாள் மாலை ஞானப்பிரகாச அடிகளார் தலைமையில் திருவிழா திருப்பலியும், தூய இன்னாசியார் திருஉருவம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தேர்ப்பவணி நடைபெறும்.
10-ம் நாள் காலை முதல் மாலை வரை சிறப்புத் திருப்பலி நடைபெறும். அதை அடுத்து இரவு கொடியிறக்கப்படும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மறை மாவட்ட பங்குத் தந்தை ஆரோக்கியம் அடிகளார் செய்துள்ளார்.