மதுரை, ஜூலை 30: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையடுத்து சனிக்கிழமை பகலில் அனுக்ஞை பூஜை நடைபெற்றது. சுவாமி சன்னதியில் உள்ள அனுக்ஞை விநாயகர் சன்னதியில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை மேற்கொண்டனர். பின்னர் தீபாராதனைகளுடன் கோயில் வளாகத்தை வலம் வந்தனர். அதன் பிறகு வாஸ்துசாந்தி நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் காலை 8.36 மணிக்கு மேல் 9 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதையடுத்து மண்டபம் முன் சுவாமி பிரியாவிடை, அம்மனுடன் சிம்மாசன வாகனத்தில் எழுந்தருளுகின்றனர்.
கொடியேற்றம் முடிந்த நிலையில், அம்மன் சிம்ம வாகனத்தில் ஆடி வீதிகளில் வலம் வருகிறார். ஆக. 9-ம் தேதி வரையில் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளாக ஆக. 2-ம் தேதி ஆடிப்பூரம் நடைபெறுகிறது.
ஆடிப்பூரத்தன்று காலை 10.32 மணிக்கு மூலஸ்தான மீனாட்சியம்மனுக்கும், உற்சவ அம்மனுக்கும் ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
ஆக. 6-ம் தேதி கிளிக்கூடு மண்டபத்தில் காலையில் சுவாமி, அம்மன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளுகின்றனர். இரவு ஆடிவீதியில் வலம் வருவர். சுவாமி,அம்மன் தங்கச்சப்பரத்திலும், சுந்தரமூர்த்தி நாயனார் வெள்ளியானை வாகனத்திலும், சேரமான் பெருமாள் நாயனார் குதிரை வாகனங்களிலும் எழுந்தருளி அருள்பாளிப்பர். ஆடிவீதி வலம் வந்த பிறகு திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கையிலாயத்துக்கு அவர்கள் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஆக. 8-ம் தேதி காலையில் சித்திரை வீதிகளில் சட்டத்தேரில் சுவாமி, அம்மன் வலம் வருதலும், மாலையில்
மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் சைத்துயோபசாரம் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
ஆக. 9-ம் தேதி கிளிக்கூடு மண்டபத்தில் பொற்றாமரைத் தீர்த்தத்துடன் விழா நிறைவடையும் என கோயில் தக்கார் கருமுத்து. தி.கண்ணன், செயல் அலுவலரும், இணை ஆணையருமான பி.ஜெயராமன் ஆகியோர் தெரிவித்தனர்.