போடி, பிப். 10: சென்னை ஆசிரியை உமாமகேஸ்வரி கொலை செய்யப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்து போடியில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
சென்னை பாரிமுனை செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளி ஆசிரியை உமாமகேஸ்வரி வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தை கண்டித்தும், ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி போடி நகர் கிளை சார்பில் அமைதி ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேவர் சிலையிலிருந்து தொடங்கி காமராஜர் சாலை, திருவள்ளுவர் சிலை வழியாக கட்டபொம்மன் சிலையை ஊர்வலம் அடைந்தது.
அமைதி ஊர்வலத்திற்கு நகர தலைவர் எம்.சீனிவாசன் தலைமை வகித்தார். நகர செயலாளர் எம்.சிவனேஸ்வர மணிச்செல்வன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தின் முடிவில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் துணைத்தலைவர் சந்திராதேவி, மூட்டா தலைவர் பாண்டி ஆகியோர் பேசினர்.
ஊர்வலத்தில் வட்டார வளமைய பயிற்றுநர்கள், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நகர, வட்டார உறுப்பினர்கள், அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் ஆசிரியை இறப்புக்கு இரங்கல் தெரிவித்து போடியில் அனைத்து ஆரம்ப பள்ளி ஆசிரியர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். பள்ளிகளிலும் இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.