தேனி, பிப். 10: சின்னமனூர் காவல் நிலையம் அருகே சொத்துத் தகராறில் வெள்ளிக்கிழமை ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
சின்னமனூர் அருகே கருங்காட்டான்குளத்தைச் சேர்ந்த இருளாண்டித்தேவர் மகன் முத்து (51). மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலராக பதவி வகித்து வருகிறார். இவரது பெரியம்மா மகன் அய்யனார்புரத்தைச் சேர்ந்த விஜயராதா (57). இவர்களது பாட்டி, அய்யனார்புரத்தில் உள்ள தனக்குச் சொந்தமான வீட்டடி மனையிடத்தை விஜயராதாவின் பெயரில் உயில் எழுதி வைத்திருந்தாராம்.
இந்த இடத்தை, இதே ஊரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு விஜயராதா விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த சொத்தில் தனக்குப் பங்கு உள்ளதாக கூறி, சின்னமனூர் காவல் நிலையம் முன்பு விஜயராதாவிடம் முத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.
தகராறு முற்றியபோது விஜயராதாவை முத்து கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. காயமடைந்த விஜயராதா சின்னமனூர் காவல் நிலையத்துக்குள் புகுந்து தஞ்சமடைந்தார். போலீஸôர் அவரை சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே விஜயராதா உயிரிழந்தார். முத்துவை சின்னமனூர் காவல் நிலைய போலீஸôர் கைது செய்து விசாரிக்கின்றனர்.