விருதுநகர், பிப். 10: விருதுநகர் பகுதியில் தர்ப்பூசணிப் பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், நோய் தாக்குதல் காரணமாக சாகுபடியும், விலையும் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி, வீரசோழன், காரியாபட்டி, திருச்சுழி ஆகிய பகுதிகளில் 300 ஹெக்டேரில் தர்ப்பூசணியை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இப்பழங்களின் சீசன் பிப்ரவரியில் தொடங்கி, மார்ச் வரை இருக்கும். கோடைக்காலத்தில் பொதுமக்கள் இப்பழங்களை விரும்பி வாங்கிச் செல்வர், அதனால் அப்பழங்களின் விற்பனையும் சூடு பிடிக்கும்.
நரிக்குடி, பாப்பாகுளம், திருச்சுழி, துலுக்கன்குளம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து தர்ப்பூசணிப் பழங்கள் விருதுநகருக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு அதிக விளைச்சல் இருந்ததால் ஒரு கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து பாப்பாகுளம் விவசாயி முத்தையா கூறியதாவது:
இரண்டு ஏக்கரில் தர்ப்பூசணிப் பழங்களைப் பயிரிட்டுள்ளேன். 1 ஏக்கரில் தர்ப்பூசணி பயிரிட ரூ.20 ஆயிரம் வரை செலவாகும்.
சாகுபடி நன்றாக இருந்தால் ஏக்கருக்கு 10 டன் வரை தர்ப்பூசணிப் பழங்கள் கிடைக்கும். சுமாராக விளைந்தால் 7 முதல் 5 டன் வரை கிடைக்கும். பழத்தின் தரத்திற்கேற்ப கடந்தாண்டு ஒரு டன் ரூ.7500 முதல் ரூ.8000 வரை விற்பனை செய்யப்பட்டது. சீசன் தொடங்கியுள்ள நிலையில் ஒரு டன் ரூ.5500 முதல் ரூ.6000 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது நோய்த் தாக்குதல், விளைச்சல் வீழ்ச்சி ஆகிய காரணங்களால் விலை குறைந்துள்ளது.
வியாபாரி ராஜன் என்பவர் கூறுகையில், இப்பழங்கள் தாராபுரம், பொள்ளாச்சி, விழுப்புரம், கடலூர், பண்ருட்டி, திண்டிவனம், சேலம், பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்துதான் விற்பனைக்கு அதிக அளவு கொண்டு வரப்பட்டன. தற்போது வரத்து குறைந்துள்ளது. திருச்சுழி, நரிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்துதான் இப்பழங்களின் வரத்து உள்ளது. கடந்தாண்டை விட, இந்தாண்டு விலை குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.