விருதுநகர், பிப். 10: காரியாபட்டி வட்டார மக்கள் சிறப்பு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனடையும் வகையில் பொது மருத்துவ முகாம் மல்லாங்கிணறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமை விருதுநகர் மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குநர் அஜிகண்ணம்மாள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.4 லட்சம் வரை, 1016 வகையான நோய்களுக்கும், 113 நோய்களுக்கான தொடர் சிகிச்சைக்கும், 22 வகையான உறுதி செய்யும் பரிசோதனைகளும் மேற்கொண்டு பயனடையலாம்.
மருத்துவ முகாமில் இருதய நோய், சிறுநீரகம், கல் அடைப்பு, புற்று நோய், காது, மூக்கு, தொண்டை நோய், குடலிறக்கம், கர்ப்பப்பை இறக்கம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இதில் காப்பீட்டுத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள், காரியாபட்டி வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில், 503 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், 164 பேருக்கு வருவாய் துறை மூலம் சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் காரியாபட்டி ஒன்றியக் குழுத் தலைவர் முத்துலட்சுமி, சமுதாய நல செவிலியர் மனோரஞ்சிதம் உள்பட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.