ஸ்ரீவில்லிபுத்தூர், பிப். 10: சென்னையில் வகுப்பறையில் ஆசிரியை குத்திக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து ஆசிரியர் சங்கத்தினர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியை ஆர்.உமா மகேஸ்வரி, 9-ம் வகுப்பு மாணவரால் வகுப்பறையில் வியாழக்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டார். இதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆசிரியர் கூட்டணி ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு அனைத்து ஆசிரியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கருப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் கூட்டணி அமைப்புகளின் தலைவர்களான தலைமை ஆசிரியர்கள் செ.மரிய ஆல்பர்ட்ராஜ், என்.ராஜசேகர், சங்கர்கணேஷ், சு.குமார் ஆகியோர் கண்டன உரையாற்றியதாவது:
மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் சில நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். இதை சில பெற்றோர் ஏற்றுக் கொள்கிறார்கள். சிலர் பிரச்னை செய்கிறார்கள். நடைமுறையில் தினமும் வரும் சிக்கல்களைத் தீர்ப்பதில் ஆசிரியர்கள் மிகக்கவனமாக நடந்து கொள்ள வேண்டியுள்ளது.
ஆசிரியர் சமுதாயம் தற்போது தங்கள் பாதுகாப்பு குறித்து யோசிக்க வேண்டிய அவசர அவசியத்தில் உள்ளது. தமிழக அரசு ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றனர்.
ஆசிரியை உமா மகேஸ்வரியின் ஆன்மா சாந்தியடைய மெüன அஞ்சலி செலுத்தினர்.