ஸ்ரீவில்லிபுத்தூர், பிப். 10: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் பிடித்து வைக்கப்பட்டிருந்த கைதி தப்பினார். இவரை போலீஸôர் தீவிரமாகத் தேடி, 8 மணி நேரத்துக்குப் பின்னர் மீண்டும் அவரை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்-மம்சாபுரம் சாலையில் உள்ளது கண்ணன் காலனி. இங்கு குடியிருந்து வருபவர் மரியம் பாட்ஷா மனைவி ரெஜினா பேகம் (30). இவரது வீட்டுக்கு வியாழக்கிழமை இதே பகுதியைச் சேர்ந்த சந்தானக்குமார் (25) என்பவர் சென்றுள்ளார். அங்கிருந்த ரெஜினா பேகத்திடம் செல்போன் எண் கேட்டாராம். என்னிடம் போன் இல்லை என்று அவர் கூறினாராம். உனது கணவர் நம்பர் கொடு எனக் கேட்டுள்ளார். அதற்கு ரெஜினா பேகம் தெரியாது என்று கூறினாராம்.
சந்தானக்குமார் தவறான நோக்கத்துடன் ரெஜினா பேகத்தை நெருங்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, ரெஜினா பேகம் வீட்டை விட்டு வெளியே ஓட முயன்ற போது, சந்தானக்குமார், தான் வைத்திருந்த அரிவாளால் ரெஜினாபேகத்தை வெட்டியுள்ளார்.
இதுகுறித்து ரெஜினாபேகம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸôர் வழக்குப் பதிவு செய்து சந்தானக்குமாரை இரவு கைது செய்து காவலில் வைத்திருந்தனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் போலீஸ் காவலில் இருந்த சந்தானக்குமார் தப்பி ஓடிவிட்டார். காலையில் சந்தானக்குமாரைக் காணாத போலீஸôர் தீவிரமாகத் தேடியுள்ளனர்.
இறுதியில், சீனியாபுரம் தெருவில் இருந்த சந்தானக்குமாரை சுமார் 8 மணி நேர தேடுதலுக்குப் பின்னர் போலீஸôர் மீண்டும் கைது செய்து அழைத்து வந்தனர்.
பின்னர் அவர், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, காவலில் வைக்கப்பட்டார்.