நரியைப் பரியாக்கிய லீலை: மதுரைக்கு புறப்பட்ட மாணிக்கவாசகர்
By | Published On : 26th August 2012 09:51 AM | Last Updated : 26th September 2012 11:32 AM | அ+அ அ- |

மேலூர், ஆக. 25: மதுரையில் நடைபெற்றுவரும் திருவிளையாடல் நிகழ்ச்சிகளில் ஒன்றான நரியைப் பரியாக்கும் லீலையில் பங்கேற்பதற்காக, மேலூர் அருகே உள்ள திருவாதவூரிலிருந்து மாணிக்கவாசகர் சனிக்கிழமை காலை புறப்பட்டார்.
திருவாசகம் தந்தருளிய தெய்வப் புலவர் மாணிக்கவாசகர் பிறந்த ஊர் திருவாதவூர். இவர், பாண்டிய மன்னரின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்தபோது, குதிரைப் படைக்குத் தேவையான குதிரைகள் வாங்கி வருமாறு, பாண்டிய மன்னர் பணம் கொடுத்து அனுப்பியுள்ளார். அந்தப் பணத்தைக் கொண்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஆவுடையார் கோயிலை மாணிக்கவாசகர் கட்டி முடித்தார். குதிரை வாங்கச் சென்றவர் நீண்டகாலமாகியும் திரும்பாததால், மன்னர் அவரை ஊருக்கு அழைத்துவர தூதுவரை அனுப்பிவைத்தார். தூதுவர் வந்ததைப் பார்த்த மாணிக்கவாசகர், மனம் கலங்கி சிவபெருமானை வேண்டினார்.
அப்போது, இறைவன் நரிகளை குதிரைகளாக மாற்றி மாணிக்கவாசகருடன் அனுப்பிவைத்தார். மதுரைக்கு அழைத்து வரப்பட்ட குதிரைகள் லாயத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. நள்ளிரவில் குதிரைகள் மீண்டும் நரியாகி ஊளையிடத் தொடங்கின. விழித்தெழுந்த மன்னர் மாணிக்கவாசகரை அழைத்து விசாரித்தார்.
பின்னர், நரிகளைப் பரியாக (குதிரையாக) அனுப்பியது சிவபெருமான்தான் என்பதை மன்னர் உணர்ந்ததாக வரலாறு. இக்கதை, தற்போது இறைவன் திருவிளையாடலாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த லீலையில் பங்கேற்பதாக, மதுரைக்கு பல்லக்கில் புறப்பட்ட மாணிக்கவாசகருக்கு, இடையபட்டி முதல் திருமோகூர் வரை திருக்கண் மண்டபங்களில் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.