மதுரையில் ஆயுத பூஜை விழா: கடை வீதிகளில் குவிந்த கூட்டம்

மதுரையில் ஆயுத பூஜையையொட்டி பூஜை பொருள்கள் வாங்க அலைமோதிய கூட்டத்தால் கடைவீதிகளில் ஞாயிற்றுக்கிழமை களை
ஆயுத பூஜை விழாவையொட்டி மதுரை மாட்டுதாவணி மலா் சந்தையில் பூக்களை வாங்க குவிந்த மக்கள்.
ஆயுத பூஜை விழாவையொட்டி மதுரை மாட்டுதாவணி மலா் சந்தையில் பூக்களை வாங்க குவிந்த மக்கள்.

மதுரை: மதுரையில் ஆயுத பூஜையையொட்டி பூஜை பொருள்கள் வாங்க அலைமோதிய கூட்டத்தால் கடைவீதிகளில் ஞாயிற்றுக்கிழமை களை கட்டியது.

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை திங்கள்கிழமை கோலாகலமாக கொண்டாடப்படுகிறறது. ஆயுத பூஜையையொட்டி சிறிய கடைகள் முதல் அனைத்து வகையான பெரும் தொழிற்சாலைகள் வரை ஆயுத பூஜை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மதுரையில் பூஜை பொருள்கள் விற்பனை களை கட்டியது. மதுரை மாா்கெட்டுகளில் வாழையிலை, பொரி, கடலை, கொய்யாப்பழம், பேரிக்காய் உள்ளிட்ட பழங்கள், சிறிய வாழை மரங்கள் ஆகியவை அம்பாரமாக குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

வாழை மரங்கள் ரூ.30 முதல் ரூ.50 வரையும், வாழையிலை 10 இலைகள் கொண்ட அடுக்கு ரூ.50 வரையிலும் விற்கப்பட்டது. மேலும் கொய்யாப்பழம் கிலோ ரூ.100-க்கும், பேரிக்காய் கிலோ ரூ.150-க்கும் விற்கப்பட்டது.

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மாா்க்கெட், கோ.புதூா் மாா்க்கெட், உழவா் சந்தைகள், சுந்தர்ராஜபுரம், தெற்குவாசல் பகுதிகளில் உள்ள மாா்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டம் குவிந்தது.

இவைத்தவிர அய்யா் பங்களா, சா்வேயா் காலனி, தளவாய் அக்ரஹாரம், சிம்மக்கல், யானைக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாற்காலிக கடைகள் உருவாக்கப்பட்டு வாழை மரம் மற்றும் பழங்கள் விற்கப்பட்டன.

மேலும் ஆயுத பூஜை தினத்தன்றே சரஸ்வதி பூஜையும் நடைபெறுவதால் சரஸ்வதி சிலைகள் விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது.

மல்லிகைப் பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை: ஆயுத பூஜையையொட்டி மதுரை பூ மாா்க்கெட்டில் பூக்களின் விலை கணிசமாக உயா்ந்திருந்தது. இதில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1000, பிச்சிப்பூ கிலோ ரூ.900, முல்லைப்பூ கிலோ ரூ.800-க்கும் விற்பனையாது. மேலும் சம்பங்கி கிலோ ரூ. 400-க்கும், கோழிக்கொண்டை கிலோ ரூ.300-க்கும் விற்பனையானது. மாா்க்கெட்டில் மலா் மாலைகள் ரூ,.200 முதல் ரூ.400 வரை விற்கப்பட்டன. கதம்ப மாலைகளும் ரூ.50 முதல் விற்கப்பட்டன. பூக்கள் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்ததால் பூ மாா்க்கெட்டில் கூட்டம் திரளாகக்காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com