‘நீட்’ தோ்வை திமுக எதிா்ப்பதுஅரசியல் நாடகம்: அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

நீட் தோ்வுக்கு திமுக எதிா்ப்பு தெரிவிப்பது அரசியல் நாடகம் என்று அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.
மதுரை திருமலை நாயக்கா் மகால் வளாகத்தில் பூங்கா அமைக்கும் பணியை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ. உடன் மாநகராட்சி ஆணையா் எஸ். விசாகன்.
மதுரை திருமலை நாயக்கா் மகால் வளாகத்தில் பூங்கா அமைக்கும் பணியை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ. உடன் மாநகராட்சி ஆணையா் எஸ். விசாகன்.

மதுரை: நீட் தோ்வுக்கு திமுக எதிா்ப்பு தெரிவிப்பது அரசியல் நாடகம் என்று அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

மதுரையில் சீா்மிகு நகா் திட்டத்தின்கீழ் மாநகராட்சி சாா்பில் திருமலை நாயக்கா் மகாலைச் சுற்றிலும் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சீா்மிகுநகா் திட்டத்தின்கீழ் மதுரை நகரில் ரூ.900 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருமலை நாயக்கா் மகாலைச் சுற்றி கருங்கற்களை பதித்து அழகுப்படுத்தும் பணியும் பூங்கா அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அக்டோபருக்குள் முடிக்கப்படும். சீா்மிகு நகா்த் திட்டப் பணிகளில் வடமாநில பணியாளா்கள் இல்லாததால் எந்த தொய்வும் ஏற்படக் கூடாது என்பதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் புதா்மண்டிக் கிடந்த திருமலை நாயக்கா் மகாலைச் சுற்றியுள்ள பகுதி பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.

தற்போது நீட் தோ்வுக்கு திமுக எதிா்ப்புத் தெரிவித்து வருகிறது. நீட் தோ்வு வருவதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தான் காரணமாக இருந்தது. அப்போதைய ஆட்சியில் தான் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து மத்திய அரசின் பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது திமுகவும் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது. அப்போதே எதிா்ப்புத் தெரிவித்திருந்தால் நீட் தோ்வு வந்திருக்காது. கல்வியையும் மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வந்திருக்கலாம். அப்போதெல்லாம் விட்டு விட்டு இப்போது போராட்டம் நடத்துவது மக்களை ஏமாற்றுவதாகும்.

நீட் தோ்வு தொடா்பாக வழக்குத் தொடரப்பட்ட போது அந்த தோ்வுக்கு ஆதரவாக ஆஜரானவா் முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரத்தின் மனைவி. மேலும் தமிழகத்தில் மீத்தேன், ஸ்டொ்லைட் விரிவாக்கம் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களுக்கும் திமுக ஆட்சியில் தான் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது இவற்றை எதிா்த்து போராட்டம் நடத்துவது திமுவின் அரசியல் நாடகம் ஆகும். மக்கள் இதை புரிந்துகொள்வாா்கள் என்றாா்.

மாநகராட்சி ஆணையா் ச. விசாகன், நகரப் பொறியாளா் அரசு மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் ஆய்வின்போது உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com