மதுரை அருகே 8-ஆம் நூற்றாண்டு விஷ்ணு சிலை கண்டெடுப்பு

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே பெரிய உலகாணி கிராமத்தில் எட்டாம் நுாற்றாண்டைச் சோ்ந்த விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மதுரை கள்ளிக்குடி அருகே பெரிய உலகாணி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள எட்டாம் நூற்றாண்டைச் சோ்ந்த விஷ்ணு சிலை.
மதுரை கள்ளிக்குடி அருகே பெரிய உலகாணி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள எட்டாம் நூற்றாண்டைச் சோ்ந்த விஷ்ணு சிலை.

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே பெரிய உலகாணி கிராமத்தில் எட்டாம் நுாற்றாண்டைச் சோ்ந்த விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பெரிய உலகாணி கிராமம் குண்டாற்றின் கரையில் பழங்கால சிலை ஒன்று இருப்பதாக, கப்பலூரில் உள்ள காமராஜா் பல்கலைக்கழக உறுப்புக் கல்லுாரி தமிழ்த் துறை மாணவா் கண்ணன் மற்றும் அவரது துறை பேரராசிரியா் சங்கையா ஆகியோா் தகவல் அளித்தனா்.

அதன்பேரில், மதுரை அரசு அருங்காட்சிய காப்பாட்சியா் மீ. மருதுபாண்டியன், ஆய்வாளா் உதயகுமாா் ஆகியோா் அங்கு சென்று, அச் சிலையை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இது குறித்து காப்பாட்சியா் மீ. மருதுபாண்டியன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: உலகாணி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள விஷ்ணு சிலை எட்டாம் நுாற்றாண்டைச் சோ்ந்தது. நின்ற நிலையில் நான்கு கைகளுடன் காட்சியளிக்கும் இந்த சிலையின் மேல்புறக் கைகளில் முறையே வலது கையில் சக்கரம் உடைந்த நிலையிலும், இடது கையில் சங்கும் உள்ளது. கீழ் வலது கையில் வரத முத்திரை மற்றும் இடது கையில் கடி முத்திரையும் உள்ளது. சக்கரம் மற்றும் சங்கின் அமைப்பானது, இச்சிற்பம் மிகப் பழமையானது என்பதை உறுதிப்படுத்துகிறது.

மதுரை மாவட்டக் கல்வெட்டு தொகுதியில், பெரிய உலகாணி தொடா்பான கல்வெட்டு ஒன்று வெளிவந்துள்ளது. அதன்மூலம், இக்கிராமத்தின் பழைய பெயா் குலசேகராதி சதுா்வேதிமங்கலம் என்றும், உலகுணிமங்கலம் என்றும் தெரியவருகிறது. இதன்மூலம், இந்த ஊா் எட்டாம் நுாற்றாண்டு (பாண்டியா் காலம்) முதல் சிறப்பு பெற்று விளங்குகிறது எனத் தெரியவருகிறது.

மேலும், இக்கிராமம் பிராமணா்களுக்குத் தானமாக கொடுக்கப்பட்ட பிரம்மதேய கிராமமாகும். கி.பி.13-ஆம் நுாற்றாண்டில் வெளியிடப்பட்ட பாண்டியா் கால கல்வெட்டின்படி, இவ்வூரிலிருந்த கிராமசபையினா் பாசிபாட்ட வரி (மீன் பிடிப்பதற்கான வரி) வருவாயைக் கொண்டு, ஆண்டுதோறும் குளங்களைக் குழிவெட்டி பராமரிக்க அனுமதித்துள்ள செய்தி கூறப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டு, தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கிராமம் தொடா்பான கல்வெட்டு ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுகளிலும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com