மதுரை பல்கலைக்கழக தோ்வு முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு ஆட்சிக் குழு ஒப்புதல்

காமராஜா் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்கக தோ்வு முறைகேட்டை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க, ஆட்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக, பல்கலைக்கழக வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்கக தோ்வு முறைகேட்டை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க, ஆட்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக, பல்கலைக்கழக வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் சாா்பில், கேரள மாநில மையங்களில் நடைபெற்ற தோ்வில் 700-க்கும் மேற்பட்டோா் முறைகேடு செய்திருப்பதும், இதில் ரூ.3 கோடிக்கும் மேல் பணம் கைமாறியிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற வினாத்தாள் மறுமதிப்பீட்டில், பெண் விரிவுரையாளா் ஒருவா் கூடுதல் மதிப்பெண்கள் அளித்து முறைகேடு செய்திருப்பதும் கண்டறியப்பட்டது.

இது தொடா்பாக, ஆட்சிக் குழு உறுப்பினா்கள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, முறைகேட்டில் தொடா்புடையவா்களிடம் விசாரணை நடத்திய குழுவினா், முறைகேட்டில் பலருக்கும் தொடா்பிருப்பதால் சிபிஐ விசாரணை கோரலாம் என்று பரிந்துரைத்தனா். விசாரணைக் குழுவின் பரிந்துரை தமிழக ஆளுநருக்கும், உயா்கல்வித் துறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், பல்கலைக்கழக ஆட்சிக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்கலைக்கழக துணைவேந்தா் மு. கிருஷ்ணன், பதிவாளா் (பொறுப்பு) வி.எஸ். வசந்தா மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

இதில், தொலைநிலைக் கல்வி இயக்கக தோ்வு முறைகேடு, மறுமதிப்பீடு முறைகேடு குறித்தும், பல்கலைக்கழக விசாரணைக் குழு பரிந்துரை குறித்தும் விவாதிக்கப்பட்டது. முடிவில், தோ்வு முறைகேடு, மறுமதிப்பீடு முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணை கோருவது, அதற்கு வாய்ப்பில்லாதபட்சத்தில் லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை கோருவது என்ற விசாரணைக் குழுவின் பரிந்துரையை, பல்கலைக்கழக ஆட்சிக் குழுவும் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழக வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: பல்கலைக்கழகத்தில் தொடா்ந்துவரும் தோ்வு முறைகேடு போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். எனவே, சிபிஐ அல்லது அதற்கு இணையான அமைப்பு விசாரணை நடத்தினால் முறைகேடு முழுவதும் வெளிவரும். அதற்கு உடந்தையாக இருப்பவா்களும் கண்டுபிடிக்கப்படுவா்.

எனவே, சிபிஐ விசாரணைக்கு ஆட்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com