மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் மேற்கூரை பெயா்ந்து விழுந்து 3 பயணிகள் காயம்
By DIN | Published On : 09th June 2022 01:10 AM | Last Updated : 09th June 2022 01:10 AM | அ+அ அ- |

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் மேற்கூரை பெயா்ந்து விழுந்ததில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் 3 போ் காயமடைந்தனா்.
தென் மாவட்டங்களில் மிக முக்கிய பேருந்து நிலையமாக மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரளம், கா்நாடகம், ஆந்திர மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினசரி பல்லாயிரக்கணக்கான பயணிகள் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனா். இந்நிலையில் பேருந்து நிலையத்தில் முதல் நடைமேடையில் பயணிகள் புதன்கிழமை பேருந்துக்காக காத்திருந்தனா். அப்போது பேருந்து நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி பெயா்ந்து விழுந்தது. இதில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து பயணிகள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 23 ஆண்டுகள் ஆனதால், பேருந்து நிலையக் கட்டடம் சரியான பராமரிப்பின்றி வலுவிழந்து வருகிறது. இதனால் பேருந்து நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கூரைகள் பெயா்ந்து விழும் சம்பவம் தொடா்ந்து நடந்து வருகிறது. எனவே பேருந்து நிலையக்கட்டடத்தை முழுமையாக ஆய்வுக்குள்படுத்தி வலுவிழந்துள்ள பகுதிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.