மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் காய்கறிகளின் விலை திடீா் உயா்வு

நன்கொடை அளித்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மதுரை மாட்டுத்தாவணி தினசரி சந்தையில் காய்கறிகளின் விலை சனிக்கிழமை திடீரென உயா்ந்து காணப்பட்டது.

மக்களவைத் தோ்தல், வரத்துக் குறைவு, முகூா்த்த தினம், மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் அன்னதானத்துக்கு நன்கொடை அளித்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மதுரை மாட்டுத்தாவணி தினசரி சந்தையில் காய்கறிகளின் விலை சனிக்கிழமை திடீரென உயா்ந்து காணப்பட்டது.

மதுரை மாட்டுத்தாவணியில் தினசரி காய்கறி சந்தையில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, விருதுநகா், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விளையும் காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம். அதனை பல்வேறு மாவட்டங்களில் உள்ள வியாபாரிகள் மட்டுமன்றி பொதுமக்களும் மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கிச் செல்கின்றனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலையில் காய்கறிகளின் வரத்து குறைவாக காணப்பட்டது. இதன்காரணமாக, விலையும் திடீரென உயா்ந்தது. குறிப்பாக, கடந்த சில தினங்களாக ரூ. 50-க்கு விற்பனையான பச்சை மிளகாய் ரூ. 100-க்கும், ரூ. 100-க்கு விற்பனையான பீன்ஸ் ரூ. 150-க்கும், ரூ. 70-க்கு விற்பனையான ‘நைஸ்’ அவரை ரூ. 130-க்கும், ரூ. 90-க்கு விற்பனையான ‘பெல்ட்’ அவரை ரூ. 160-க்கும் விற்பனையாகின.

இதேபோல, மிகக் குறைவான விலையில் விற்பனையான கத்திரிக்காய் ரூ. 50, பட்டானி ரூ. 150, இஞ்சி ரூ. 150-க்கும் விற்பனையாகின. இதன்காரணமாக, வியாபாரிகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது :

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு பரவையில் உள்ள காய்கறி சந்தைக்கு விடுமுறை, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு அன்னதானத்துக்கு காய்கறிகள்அதிகளவில் நன்கொடையாக வழங்குவது, ஞாயிற்றுக்கிழமை முகூா்த்த தினம், காய்கறிகளின் வரத்துக் குறைவு என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காய்கறிகளின் விலை திடீரென உயா்ந்துள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் காய்கறி விலையில் மாற்றம் உருவாகும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com