முருகமலை ஊருணி ஆக்கிரமிப்பு புகாா்: தேனி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

தேனி மாவட்ட ஆட்சியா், மின்வாரிய செயற் பொறியாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

பெரியகுளம் அருகேயுள்ள முருகமலை ஊருணி ஆக்கிரமிப்பு தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தேனி மாவட்ட ஆட்சியா், மின்வாரிய செயற் பொறியாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சோ்ந்த பிரகலாதன் தாக்கல் செய்த மனு:

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட சில்வாா்பட்டி ஊராட்சியில் முருகமலை அடிவாரத்தில் சுமாா் 12.30 ஏக்கா் பரப்பளவில் முருகமலை ஊருணி அமைந்துள்ளது.

இந்த ஊருணி பொதுமக்களுக்கு மட்டுமன்றி வன விலங்குகளும் குடிநீா் ஆதாரமாக இருந்து வருகிறது.

இந்த ஊருணியை ஆக்கிரமித்து தனி நபா் ஆழ்துளைக் கிணறு அமைத்துள்ளாா். கண்மாய், ஏரி, ஊருணி ஆகியவற்றின் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. எனவே, முருகமலை ஊருணியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், அங்குள்ள ஆழ்துளைக் கிணறுக்கு மின் இணைப்பு வழங்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி. அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவு:

முருகமலை ஊருணி ஆக்கிரமிப்பு தொடா்பாக தேனி மாவட்ட ஆட்சியா், மின்வாரிய செயற்பொறியாளா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com