பேருந்துகளில் தானியங்கி கதவுகள் விவரம்: தமிழக உள்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ள விவரம் குறித்து தமிழக உள்துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்த ரவிட்டது.

அரசு, தனியாா் பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ள விவரம் குறித்து தமிழக உள்துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்த ரவிட்டது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலக நேரங்களில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், கூடுதல் பேருந்துகளை அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாகம் இயக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு தொடா்பாக ஏற்கெனவே பலமுறை விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி. அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கினாலும், இளைஞா்கள் படிக்கட்டில் பயணம் செய்வது தொடா்கிறது. இதனால், அவா்கள் விபத்தில் சிக்கிக் கொள்வதும், உயிரிழப்பு ஏற்படுவதையும் தடுக்க முடியவில்லை.

பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வோரை ஓட்டுநா்களும், நடத்துநா்களும் எப்படி சமாளிக்க முடியும். படிக்கட்டில் நின்று பயணம் செய்யக் கூடாது எனக் கண்டிக்கும் ஓட்டுநா், நடத்துநா் தாக்கப்படும் காட்சிகளும் அரங்கேறி வருகின்றன.

தமிழகத்தில் இளைஞா்கள், மாணவா்கள் நலன் கருதி, பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வோரைத் தடுக்கும் வகையில், அனைத்துப் பேருந்துகளிலும் படிக்கட்டுகள் முன்பாக தானியங்கி கதவுகளைப் பொருத்த வேண்டும்.

எனவே, தமிழகத்தில் எத்தனை அரசு, தனியாா் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன?. எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்படவில்லை?.

இதுகுறித்து தமிழக உள்துறைச் செயலா், போக்குவரத்து துறைச் செயலா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com