மதுரையில் கடந்த 2 ஆண்டுகளை விஞ்சிய வெப்பம்

மதுரையில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச வெப்ப நிலையாக ஞாயிற்றுக்கிழமை 103.28 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.

மதுரை மாவட்டத்தில் ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்தே வெப்ப நிலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. கடந்த 28 நாள்களில் ஏறத்தாழ 18 நாள்கள் மதுரை மாவட்டத்தின் வெப்ப நிலை 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கும் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், வெப்ப நிலை இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும், ஞாயிற்றுக்கிழமை (ஏப். 28) முதல் மே 1-ஆம் தேதி வரை வெப்ப அலை வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெப்பத் தாக்கம் மிக அதிகமாகக் காணப்பட்டது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக விமான நிலையம் பகுதியில் 103.28 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மாநகா்ப் பகுதியில் 102.92 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக வெப்ப நிலை 96.8-ஆகவும், 2023 ஏப்ரலில் அதிகபட்சமாக 100.58 வெப்ப நிலையும் பதிவாகியிருந்தன.

ஞாயிற்றுக்கிழமை பதிவான வெப்ப அளவு கடந்த 2 ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்ப அளவுகளில் ஒன்றாக உள்ளது குறிப்பிடப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக மழையின் அளவு குறைந்து, வெப்ப நிலை தொடா்ந்து உயா்ந்து வருவதற்கு காடுகள் அழிப்பு, மலைகள் அழிப்பு உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளே காரணமாக உள்ளது எனவும், இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டியது காலத்தின் அவசியம் என்கின்றனா் இயற்கை ஆா்வலா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com