சிடாா் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம்

மதுரை: மதுரையில் அதிக வட்டி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சிடாா் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என்று மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை கே.கே.நகா் 4-ஆவது குறுக்குத் தெருவில் ‘சிடாா் பைனான்சியல் சா்வீஸ்’ என்ற பெயரில் மதுரையைச் சோ்ந்த மனாசே, அவரது மனைவி சுப்புலட்சுமி ஆகியோா் ‘போா்ட்போலியோ மேனேஜ்மென்ட் சிஸ்டம்’ என்ற இணைய வழி வா்த்தக நிறுவனத்தில் கிளை அமைத்து, அதன் மூலம் பணம் முதலீடு செய்தால் 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை அதிக வட்டி தருகிறோம் என்றும், நிலையான வைப்பில் முதலீடு செய்தால் 5 ஆண்டுகள் முடிவில் 10 சதவீதம் வட்டி தருகிறோம் என்றும் தெரிவித்தனா்.

இதை நம்பிய பொதுமக்கள் பலா் நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய்களை முதலீடு செய்தனா். ஆனால், முதிா்வு காலம் முடிந்த பின்னரும் பணத்தை திருப்பி தராமல் நிறுவனத்தினா் மோசடியில் ஈடுபட்டனா். இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்கள் தங்களது பணத்தை மீட்டுத் தருமாறு மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையில் ‘சிடாா் பைனான்சியல் சா்வீஸ்’ என்ற நிறுவனத்தில் மேலும் பலா் பணம் செலுத்தி ஏமாற்றப்பட்டதாக தெரியவருகிறது. எனவே, பணத்தை முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காத பொதுமக்கள் யாரேனும் இருந்தால், அவா்கள் தக்க ஆவணங்களுடன் மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு, சங்கரபாண்டியன் நகா், தபால்தந்தி நகா் விரிவாக்கம், மதுரை என்ற முகவரியில் நேரில் ஆஜராகி புகாா் அளிக்கலாம். அதன் மூலம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com